இவ் வீரகத்தி விநாயகர் ஆலயம் ஆதிமுதலில் சுமார்
கி.பி 14 ஆம் நூற்றாண்டில் குளக்கோட்டு மன்னனால் வழங்கப்பட்ட
விநாயகர் விக்கிரகத்தை ஸ்தாபித்து வணங்கப்பட்டதாக வரலாற்றுச்
சான்றுகள் உண்டு. இந்தியாவில் சிதம்பரம் என்ற இடத்தில் விளைவேலி
என்ற ஊரிற் பிறந்த அந்தணப் பெருமகன் ஒருவன் தன் சிவ பூசையில் வைத்து
வந்த விநாயக விக்கிரகத்தை இந்த ஆலயத்திற்கு வழங்கியதாகவும் அதனால்
இக்கிராமத்திற்கு விளைவேலி என்ற பெயர் வழங்கலாயிற்று என்றும்
நாளடைவில் இது விளைவேலி ஆதீனமாக மாறியதாகவும் விளைவேலி ஆதீனம் என்ற
வரலாற்று நூல் குறிப்பிடுகின்றது.
இவ் விநாயகர் ஆலயத்தைத் தொட்டு அந்தணர் பரம்பரை உருவாகியது.
இவர்களில் வேதக்குட்டிக் குருக்கள், ஆனைக்குட்டிக் குருக்கள்
என்போர் குறிப்பிடத்தக்கவர். இவர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும்
மாபெரும் சாதனைகளை நிலைநாட்டி புகழடைந்துள்ளனர். இக்காலத்தில்
அந்நியர் ஆட்சி நிகழ்ந்தது. இந்த மதத்திற்கு மாபெரும் சோதனைக்
காலமாக அமைந்தது. இக்காலத்தில் இவ் ஆலயச் சிவாச்சாரியார்
மூலமூர்த்தி உட்பட சகல சமய புனித சின்னங்களையும் திருமஞ்சனக்
கிணற்றில் போட்டு மூடிவிட்டு இந்தியாவிற்குச் சென்றுவிட்டார்.
இலங்கையில் சைவ சமயத்திற்கு பீடித்திருந்த பொல்லாத காலம் மாறி மத
சுதந்திரம் கிடைத்த பொற்காலம் உதயமானது. இக்காலகட்டத்தில் ஆலயச்
சிவாச்சாரியார் திரும்பி வந்து பார்த்த போது மூடியிருந்த
திருமஞ்சனக் கிணற்றின் மேல் மருதங்கன்று ஒன்று முளைத்திருப்பதை
கண்டனர். இக்கன்றுக்குத் தீங்கின்றி விக்கிரகங்களை அகழ்ந்தெடுத்து
அதற்கருகில் புதிய ஆலயமொன்றை ஆகம விதிப்படி அமைத்து
வழிபடத்தொடங்கினர். இம் மருதங்கன்றினை கி.பி 1560 ஆம் ஆண்டு ஐப்பசி
மாதம் 25 ஆம் திகதி போர்த்துக்கேயர் அழிக்க முயன்றனர். ஆதில் ஒன்று
கடைசி முயற்சியாக இம் மருதங்கன்றில் ஒரு கயிற்றினைப் பிணைத்து அதனை
யானையின் துதிக்கையில் கொடுத்து அதன் மூலம் அழிக்க முயற்சி செய்தனர்.
இம் முயற்சி விநாயகர் அருளால் கைகூடவில்லை. இந்த யானையின் உருவம்
போன்ற அமைப்பு இம் மருத மரத்தில் இன்றும் இருப்பதைக் காணலாம்.
அத்துடன் போர்த்துக்கேயர் மருதங்கன்றின் புனிதத்துவத்தையும்
உணர்ந்தனர். இக் கன்று நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து இன்று
இவ் ஆலயத்தின் தலவிருட்சமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. இவ்
ஆலயத்தை வணங்க வரும் பக்தர்கள் முதலில் மருதமரத்தினை வலம் வந்த
பின்பே மூலமூர்த்தி உட்பட பரிவாரத்தையும் வணங்குகின்றனர்.
|